Tuesday, December 1, 2009

ஊழலற்ற சமுதாயம்


"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது " என்னும் பழமொழி எனது தலைப்பிற்கு உகந்த தொடக்கம் என்று கருதுகிறேன் .சிறு வயதில் நாம் கற்பனவும், நமக்குக் கற்பிக்கப் படுவனவும் நம் மனத்தில் பசுமரத்தாணி போலப் பதிந்துவிடும் என்பது மறுக்க முடியாத உண்மை. தனி மனித ஒழுக்கம் என்பது இளம்வயதிலிருந்து கடைபிடிக்க வேண்டிய ஒன்று.ஒரு மனிதனின் நல்லொழுக்கம் அவனைத் தனிப்பட்ட முறையில் மேம்படுத்துவது மட்டுமன்றி அவனைச் சார்ந்துள்ளவர்களையும் வெகுவாகப் பாதிக்கும் என்பதற்கு ஊழல் ஒரு சிறந்த சான்றாகும். தனிமனிதனின் ஒழுக்கம் அவன் வாழ்வை செம்மைப் படுத்துவது மட்டுமன்றிச் சமுதாய மேம்பாட்டிற்கும் வித்திடும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் ஊழல் என்னும் அரக்கனின் பிடியில் சிக்கித் தவித்திருப்போம்,ஏனெனில் ஊழல் என்பது இன்று காற்றைப் போல எங்கும் பரவி நிறைந்திருக்கிறது.நம் அய்யன் திருவள்ளுவர் முதல் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வரை ஊழலைப் பற்றியும் அதன் விளைவுகளைபற்றியும் பேசாத சான்றோர்களே இல்லை எனலாம்.பின்பு ஏன் ஊழலை நம்மால் ஒழிக்க இயலவில்லை?வளமான விளைச்சல் தரும் ஒரு வயலில் களைகளைக் களைய முற்படும் நாம் அதன் தழைகளை மட்டுமே நீக்கினால் போதாது.களைகளை வேரோடு நீக்க முற்பட வேண்டும்.அந்த வேர் நம் ஒவ்வொருவரின் மனத்திலும் ஊன்றி உள்ளது.இந்த இளம் பருவத்தில் நாம் நம்மைச் செம்மைப் படுத்திக் கொண்டால் அது நம்முடைய வாழ்விற்கு மட்டுமன்றி நம்மைச் சார்ந்துள்ளவர்களுக்கும் பயன் தரும்.இன்று வெறும் எண்ணமாக நம் மனத்தில் பதிந்திருப்பது ஆழமாக இருக்குமானால் நாளை செயல்களாக உருவெடுத்துப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.ஒரு சிறு தீப்பொறி ஒரு அடர்ந்த காட்டையே கரியாக்கும் வல்லமைப் படைத்தது .நம் மனத்தில் ஒரு தீப்பொறியைத் தோற்றுவிப்போம். அந்தத் தீப்பொறி பல ஆயிரக்கணக்கான அறிவுச் சுடர்களை ஏற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நம் சமுதாயத்தில் அன்றாடம் நிகழும் தீமைகளைத் தீ வைத்து எரிக்கவும் பயன் படட்டும்.ஒரு சமுதாய மாற்றம் நம்மால் ஏற்படட்டும். மாணவர்களாகிய நாம் மனம் வைத்தால் மட்டுமே இந்தச் சமுதாய நலக்கேடுகளை முற்றிலுமாக அகற்ற இயலும். இந்தச் சமுதாயம் என்னும் மலர்த் தோட்டத்தைக் காக்கும் முள் வேலியாக மாணவர்கள் உருவெடுக்க வேண்டும்.இருப்பதைக் கொண்டு மன நிறைவு பெறும் பக்குவத்தை இளம் வயதிலேயே நாம் பெற்றுவிட்டால்,எதிர் காலத்தில் ஊழல் என்ற சொல்லே அகராதியிலிருந்து நீங்கி விடும்.நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற இந்த உலகத்தைச் சீர்படுத்துவது நம் கடமை மட்டும் அல்ல.,அது நமக்குப் பெருமையும் கூட.அதுவே அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் பேருதவியுமாகும் .தவறு செய்ய ஒரு நொடி போதும்;தவறு செய்யக் கூடாது என்ற எண்ணம் தோன்ற வெகு நேரம் ஆகும்;அந்த எண்ணத்தை நிலைநிறுத்தவும்,செயல்களாக உருமாற்றம் செய்யவும் நாம் நீண்ட காலம் காத்திருக்க வேண்டும்.ஆனால் அந்தச் செயல்களின் பலன்களை எண்ணிப் பாருங்கள்...பல யுகங்கள் இந்தச் சமுதாயத்தின் நலன் பேணிக் காக்கப்படும்.எனவே, தாமதம் சிறிதுமின்றி இந்த நொடியே முடிவெடுப்போம். ஊழலை ஒழிப்போம். நம் சந்ததியினருக்கு ஒரு ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்கித் தருவோம்!பல தலைமுறைகள் நம்மை வாழ்த்தட்டும்!!!
- சமுதாய மாற்றம் ஏற்ப்படுவதை விரும்பும் ,
"எழில் விழித்தாரகை "

{Note:This article of mine was published in "Guindy Times" recently}

2 comments: