Monday, October 11, 2010

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்...

கனவுகளையும் உழைப்பையும் கலந்து கட்டி வைத்த மணல் கோபுரத்தைக் காலம் என்ற கடல் அலை தன் பாசக்கரங்களால் அணைத்து இழுத்துச் சென்று தன்னுள் கரைத்துவிட்ட நிலையில் ஒன்றும் செய்ய அறியாது அவ்விடத்தை வெறித்துப் பார்க்கும் ஒரு சிறு குழந்தையின் மனநிலையில்தான் இன்று சென்னையில் ஒரு பிரதான சாலை வழியாக வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். எப்போதும் போல என் கண்கள் சாலை ஓரங்களை உற்று நோக்கியவாறு மனதிற்குத் தீனியைத் தேடிக்கொண்டிருக்கும் வேளையில் என் கருவிழி இரண்டும் உற்சாகத்தில் எட்டிப் பார்த்து கைதட்டியது போல் இருந்தது எனக்கு. அந்த உணர்வு என் கண்களிலிருந்து மனத்திற்கும், மனத்திலிருந்து என் முகத்திற்கும் தாவியது, அதன் விளைவாக என் முகத்தில் பூத்த புன்னகையை அவ்வளவு எளிதாக என்னிடம் பார்க்க இயலாது. என் அருகில் அமர்த்திருந் அம்மா என்னை விநோதமாகப் பார்த்தாள். என் திடீர் புன்னகையின் பின்னணியை அறிய முற்பட்டாள். சற்றுத் திரும்பிப் பார்த்த அவளுக்கு ஒரு வகையான சலிப்பு ஏற்பட்டதை என்னால் உணர முடிந்தது. வானம் பார்த்த பூமிக்குத்தான் மழையின் வருகை மகிழ்வைத்தரும். வெள்ளம் சூழ்ந்துள்ள நிலத்தில் மழை பொழிந்தால் ரசிக்கவா தோன்றும் ? என் தாயின் மனக்குரலை என்னால் கேட்க முடிந்தது. ஏனெனில் அவள் அங்குப் பார்த்தது ஒரு குழந்தையை. ஆம்...எனக்குக் குழந்தைகளின் மீது உள்ள ரசிப்புத்தன்மை அவளுக்குப் புதிய செய்தி அல்ல. ஆனால் அங்கு நிகழ்ந்தது ஒரு இயல்பான நிகழ்வு அல்ல என்பதை நான் கூற முற்படவும் இல்லை. நான் பார்த்த அக்குழந்தைக்கு இரண்டு வயதிருக்கும். ஒரு நடுத்தர வயது உடைய தாய் அக்குழந்தையை இழுத்துக்கொண்டு விரைந்தாள். அக்குழந்தையின் முதுகில் இப்போதே புத்தகச் சுமை.விளையாட்டுப் பள்ளிக்குச் செல்வது போல் தோன்றியது. அப்போது குறுக்கிட்டு யாசித்தான் ஒரு இந்தியப் பிரஜை. அவன் நடக்க இயலாதவன் என்பதை அவன் வைத்திருந்த கைப்பிடி வாயிலாக அறிந்துகொண்டேன். அந்தப் பெண் அதனைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை. முறைத்துவிட்டுச் சென்றாள். ஆனால் அக்குழந்தையோ யாசகனைப் பார்த்து நகைத்தது.நகைத்துவிட்டு திரும்பிப் பார்த்து ஒரு கையை அசைத்த வண்ணம் தன் தாயின் வேகத்திற்கு ஈடுகொடுக்க இயலாமல் அவனை நோக்கி கையசைத்துக்கொண்டே சிரித்த அக்காட்சி கண்களை விட்டு அகலும் முன் என் கண்கள் யாசகனை நோக்கியது. அவன் முகத்தில் ஒரு மலர்ச்சி, தன் நிலையை மீறி கட்டுக்கடங்காத அவன் சிரிப்பு , அணையை உடைக்க கரை புரண்டு ஓடும் வெள்ளத்தோடு ஒப்பிடத் தோன்றியது எனக்கு. அந்த நொடிப் பொழுது என் மனத்தில் ஓடிய எண்ணங்கள் எண்ணிலடங்கா! வாகனத்தில் வசதியாகச் சென்றுகொண்டிருந்த எனக்கும் வாசலில் யாசகம் கேட்கும் அம்மனிதனுக்கும் வாழ்க்கையின் தேவைகள் என்னவோ ஒன்றுதான். ஆனால் நான் பெற்றோருடைய உழைப்பில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் , அவன் தன் வாழ்க்கையை வாழ வழி தேடிக்கொண்டிருக்கிறான். இருவரையும் ஒரே தராசில் நிற்க வைத்துச் சென்றுவிட்ட கள்ளங்கபடம் அற்ற அக்குழந்தை வாழ்க்கையைக் கற்றுக்கொடுத்துவிட்டது. நாம் அனைவரும் அவனை யாசகனாகத் தான் பார்க்கிறோம் ( நானும் இவ்வலைப்பூவில் அவ்வாறுதான் குறிப்பிட்டிருந்தேன் ) ஆனால் அக்குழந்தையோ அவனை சக மனிதனாகப் பாவித்து யாரும் இதுவரை அவனுக்கு அளிக்காத மதிப்பை ,தானும் இவ்வுலகில் கவனிக்கப்படுகிறோம் என்ற உணர்வை, தன்னம்பிக்கையைக் கொடுத்துவிட்டுச் சென்றது. அதன் வெளிப்பாடுதான் அவனுடைய நகைப்பு. பிறர் அவனுக்குப் பொருள் வழங்கி இருப்பார்கள், உணவு அளித்திருப்பார்கள்...ஆனால் அக்குழந்தையோ அவனுக்கு உணர்வளித்துள்ளது...!!தான் வாழத் தகுதியானவன் என்ற உணர்வு...வறுமையைக் கடந்த வாழ்வின் இன்பங்கள் அவனுக்கு விளக்கப்பட்டிருக்கும். அந்த நொடி என் மனம் கனத்தது. ஆனால் என் முகமோ நகைத்தது!
"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே
அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே "
என்னும் பழைய பாடல் வரிகளை நினைவு கூர்ந்தேன்...நகைத்தேன்!
அந்தத் தாய் அவனுக்கு எவ்வளவு பொருள் வழங்கி இருந்தாலும் அந்தக் குழந்தை வழங்கிய அழியாத நம்பிக்கைக்கும் அன்பிற்கும் ஈடாகாது. சக மனிதரிடம் அன்பு காட்டப் பணம் படைத்திருக்க வேண்டாம்...மனம் படைத்திருந்தால் போதும்...!
மனிதனை மனிதனாக மதிக்கத் தெரியாத ஏற்றத் தாழ்வு மிக்க இச்சமுதாயத்தில் வாழ்ந்து வரும் நாம் ஒன்றை மறந்து விட்டோம்...சதுரங்க ஆட்டத்தில், ஆட்டம் முடிந்ததும் எல்லாக் காய்களும் ஒரே பெட்டிக்குள் தான் அடைக்கப்படுகின்றன...அதில் அரசன் என்ன ?வீரன் என்ன? மூச்சுள்ள வரைதான் மனிதனின் தராதரம்...அதன் பின்னர் எல்லாம் உரம் தான் இந்த மண்ணுக்கு!
எனவே வாழும் காலத்தில் ஏற்றத் தாழ்வுகளைக் களைவோம்! மனிதனாக வாழ்வோம் !
திருமூலர் பாடலின் படி .....
படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அது ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயின்
படமாடக் கோயில் பகவற்கு அதாமே !!!